ரிஸ்கை அதிகரிப்பதற்கான 6 வழிமுறைகள்
*** சகோதரர் இஸ்மாயில் கம்தார் என்ற சகோதரர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையை தமிழில் மொழி மாற்றம் செய்துள்ளேன். தவறிருந்தால் மன்னிக்கவும். **
தமிழில்: அபு அம்மாராஹ்
ரிஸ்க் என்பது செல்வம், உடல் நலம், உணவு, அறிவு, வளங்கள், நேரம், மற்றும் முழு வாழ்வாதாரத்தையும் உள்ளடக்கியது. இவை அனைத்தும் அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட்கொடைகள். நாம், அல்லாஹ் அர்-ரசாக் (யாவற்றையும் வழங்குபவன்) மற்றும் அனைத்தும் அவனிடமிருந்தே கிடைக்கிறது என நம்புகிறோம். மனிதர்களின் நோக்கங்கள் வேறுபட்டாலும் அதிகமாக ரிஸ்க் கிடைக்க வேண்டுமென்பது ஒவ்வொருவரும் ஆசைபடும் ஒரு விஷயமே.
சிலர் உலகில் தவறான நோக்கங்களுக்காக அதிக ரிஸ்கை எதிபார்க்கின்றனர். இந்த கட்டுரை அது போன்ற மக்களுக்காக அல்ல. இந்த கட்டுரையில், ரிஸ்கை அதிகரிப்பதற்கான ஆறு இபாதத்தான செயல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவைகள் ரிஸ்கை அதிகரிப்பதற்கான ஆன்மீக காரணங்கள் மட்டுமே. நேர்மையான எண்ணம் கொண்ட மக்கள் இதனால் பயனடைவார்கள்.
முஸ்லிம்களாகிய நாம், குடும்பங்களை கவனித்தல், மற்றவர்களுக்கு அதிகமாக உதவி செய்தல், சுவர்க்கத்தை அடைதல் மற்றும் சமூக மேம்பாட்டுக்கு உதவுதல் போன்ற உன்னத நோக்கங்களுக்காக அதிக ரிஸ்கை எதிர்பார்க்க வேண்டும். இந்த நல்ல காரணங்களுக்காக அன்றி சுயநலங்களுக்காக ரிஸ்க்கை அதிகரிக்க நினைக்கக் கூடாது.
இந்த நல்ல நோக்கத்தின் அடிப்படையில், குர்ஆன் சுன்னாஹ் அடிப்படையில், ரிஸ்கை அதிகரிப்பதற்கான ஆறு ஆன்மீக காரணங்களை பார்ப்போம்.
- தக்வா
அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டிருப்போருக்கு இந்த நற்போதனை செய்யப்படுகிறது – தவிர, எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்.
அ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான்; மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன்; நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் – திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான். (65:2-3)
இந்த வசனம் குர்ஆனில் எனக்கு பிடித்த வசனங்கள் ஒன்றாகும். நாம் நம் வாழ்க்கையில் பல முறை கண்ட ஒரு விஷயம், இறை அச்சத்துடன் வாழும் பலர், அவர்கள் கற்பனை கூட செய்து பார்த்திராத வழிகளில் அதிக ரிஸ்கை பெற்றுள்ளனர்.
இது அல்லாஹ்வின் வாக்குறுதி மற்றும் அல்லாஹ்வின் வாக்குறுதி எப்போதும் உண்மையாக இருக்கும்.
அல்லாஹ்வின் ரிஸ்கின் அற்புதங்களை, உண்மையில் உணர்வதற்கு, முதலாவதும் அடிப்படையுமான விடயம். நாம் நமது இறையச்ச்சத்தை அதிகரிப்பதும், குறிப்பாக அல்லாஹ் நம்மை சோதிக்கும்போது, நாம் தளர்ந்து விடாமல் இன்னும் உறுதியாக இறையச்சத்துடன் இருப்பதும் முக்கியமாந ஒன்று. தகவா வெற்றிக்கு முக்கிய வழியாகும்.
- தவக்குல் (அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தல்)
மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன்; நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் – திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான். (65:3)
முதல் பாதியில் தக்வா வலியுறுத்தப்படும் அதே நேரம், அதன் இரண்டாவது பாதியில் தவக்குல் வலியுறுத்தப்படுகிறது. இங்கு தவக்குல் என்பது, அல்லாஹ் நிச்சயமாக நமக்கு பொருத்தமான மிகச்சிறந்ததையே வழங்குவான் என முழுமையாக நம்பும் அதே வேளை, நம்மாலான முழு முயற்சியையும் செய்வதாகும். அதாவது மிகவும் சிக்கலான கஷ்டமான நேரங்களிலும், அல்லாஹ்வின் உதவியில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பதாகும். தவக்குலானது தடைகளை தாண்டி நமது ரிஸ்கை அதிகரிப்பதற்கான ஒரு முக்கிய திறவுகோளாகும்.
- ஸதகா
(கஷ்டத்திலிருப்போருக்காக) அல்லாஹ்வுக்கு அழகிய கடன் எவர் கொடுக்கின்றாரோ, அதை அவருக்கு அவன் இரு மடங்காக்கி பன்மடங்காகச் செய்வான் – அல்லாஹ்தான் (உங்கள் செல்வத்தைச்) சுருக்குகிறான்; (அவனே அதைப்)பெருக்கியும் தருகிறான்; அன்றியும் நீங்கள் அவனிடமே மீட்டப்படுவீர்கள். (2:245)
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (2:261)
நாம் நமது ரிஸ்க் அதிகரிக்கப் பட வேண்டும் என்ற எண்ணத்தோடு மட்டும் ஸதகா கொடுக்க கூடாது. நாம் பல ஏழைகளுக்கு உதவவும் மற்றும் பலர் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் நல்லெண்ணத்திலும் ஸதகா கொடுக்க வேண்டும். அதே போல், நமது நல்லெண்ணத்தையும், இறை அச்சத்தையும், ஸதகாவின் தன்மையையும் பொறுத்து அல்லாஹ் அதனை பன்மடங்காக்கி திருப்பி தருகிறான்.
பொதுவாக அல்லாஹ்வின் ரிஸ்கை அதிகம் அனுபவிக்கும் முஸ்லிம்களிடம் காணப்படும் ஒரு முக்கிய பண்பு, அதிகமாக ஸதகா (கொடை) வழங்கும் குணமாகும்.
ஸதகா, நம் ரிஸ்கை பல மடங்காக்கும் ஒரு வழிமுறை. தக்வா, தவக்குல், ஸதகா ஆகிய மூன்றும் ஒருவரிடத்தில் சேர்ந்து காணப்பட்டால், இன்ஷா அல்லாஹ், நிச்சயமாக அவர் கற்பனை செய்திராத அளவு ரிஸ்கை அல்லாஹ் அவருக்கு வழங்கலாம்.
- நன்றியணர்வு / நன்றி செலுத்துதல்
“(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்). (14:7)
ரிஸ்கை அதிகரிப்பதற்கான நான்காவது முக்கிய காரணி, அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதாகும். இது எவ்வளவு சிறிய அருட்கொடையாக இருந்தாலும் சரியே. அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும்போது ரிஸ்க் அதிகரிப்பதும், அல்லாஹ்வின் அருட் கொடைகளை குறை கூறுவதால் நம் ரிஸ்க் குறைவதும் ஒரு பொதுவான விதியே.
நாம் நமது நாளாந்தம், அல்லாஹ் நமக்கு வழங்கிய ஒவ்வொரு அருட்கொடையையும் நினைவு கூர்ந்து அவனுக்கு நன்றி செலுத்துவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.
- இஸ்திக்பார் / பாவ மன்னிப்பு
மேலும், “நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்” என்றும் கூறினேன். “(அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான். “அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்; இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான். (71: 10-12)
ஐந்தாவது காரணம் நபி நூஹ் (அலை) தனது மக்களுக்கு செய்த ஆலோசனையின் இருந்து எடுக்கப்பட்டது. நபி நூஹ் (அலை), தன் மக்களுக்கு அவர்கள் “பாவமன்னிப்பு செய்தால்”, நிச்சயமாக அல்லாஹ் அவர்களின் ரிஸ்கை அதிகரிப்பான் என்று தெரிவித்தார்.
மேல் குறிப்பட்ட குர்ஆன் வசனத்தில் மழை, செல்வம், மக்கட்பேறு, தோட்டங்கள் , மற்றும் ஆறுகள் ஆகிய அனைத்தும் ரிஸ்கில் உள்ளடங்கும். எனவே ஐந்தாவது காரணி மிக இலகுவானது. நாம் ஒவ்வொருவரும் தினமும் பல பாவங்கள் செய்கிறோம். தினமும் பலமுறை அதிகமதிகம் பாவ மன்னிப்பு தேடுவதன் மூலம் நமது வாழ்வில் பரக்கத் அதிகரித்து ரிஸ்கும் அதிகரிக்கிறது.
- குடும்ப உறவுகளை பேணுதல்
குடும்ப உறவுகளை பேணும்
இறைவனின் தூதர் (ஸல்) நவின்றார்கள்.
“யார் ரிஸ்கிலும்(பொருளாதாரம்) ஆயுளும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறாரோ அவர் தம் உறவினருடன் ஒட்டி வாழட்டும்.
அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) புகாரி, முஸ்லிம்
ரிஸ்கை அதிகரிக்கச்செய்யும் இறுதிக் காரணி, குடும்ப உறவுகளை பராமரித்தலாகும்.
ஒரு உண்மையான விசுவாசி குடும்ப உறவுகளை உடைக்க முடியாது. மேலும் அவர்களது தவறுகளை மன்னிப்பவராகவும் இருப்பார். குடும்ப உறவுகளை பராமரிக்க நாம் செய்யும் ஒவ்வொரு முயற்சியிலும் அல்லாஹ் நம் ரிஸ்கை அதிகரித்து நம் வாழ்நாளையும் நீடிக்கிறான். இது அல்லாஹ், குடும்ப உறவை பேணுபவர்களுக்கு வழங்கும் பரக்கத் ஆகும்.
இறுதி நினைவூட்டல்
நினைவில் வையுங்கள் இந்த துனியா என்பது ஒரு தற்காலிக வாழ்க்கையே. ஆனால், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெறுவதே முஸ்லிம்களுக்கு மிகவும் முக்கியமானது. ரிஸ்கை அதிகரிப்பதன் மூலம், அந்த ரிஸ்கை கொண்டு நாம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை சம்பாதிக்க முடியாவிட்டால், அது பெறுமதியற்றது. அதே போல் நமது ரிஸ்க் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகரிக்கிறதோ அந்த அளவு நாம் நாளை மறுமை நாளில் பதில் சொல்ல வேண்டி உள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். நினைவில் கொள்ளுங்கள் நாம் நமது செல்வம் , நேரம் மற்றும் ஆரோக்கியம் என்பவற்றுக்கு அவனுக்கு பதில் சொல்ல வேண்டும். குறிப்பாக அல்லாஹ் நமக்கு தந்த இந்த அருட்கொடைகளை எவ்வாறு பயன் படுத்தினோம் எனவும் பொறுப்பு சொல்ல வேண்டும்.
நாம் நமது ரிஸ்கை அதிகரிக்க செய்து, அதை நாம் நல்ல வழியில் பயன்படுத்த அல்லாஹ் அருபுரிவானாக. ஆமீன்.
தமிழில்
அபு அம்மாராஹ் (முஹம்மது ஸாதிக்)



