அபு அம்மாராஹ்கசப்பான உண்மைகள்தொடர் கட்டுரை

கசப்பான உண்மைகள் – பாகம் 1

கசப்பான உண்மைகள் – பாகம் 1

(இந்த தொடரை எழுதுமுன் பல முறை யோசித்தேன், பிறகு சில கசப்பான உண்மைகளை தனிப்பட்ட வகையில் யாரையும் குறிப்பிடாமல் அழகிய முறையில் தெரியப் படுத்துவதும், அதன் மூலம் சமுதாயத்தில் ஒரு எச்சரிக்கை மணி அடிப்பதும், இஸ்லாம் கூறும் தீயவற்றை தடுப்பத்தின் ஒரு வகையே என நினைத்து இத்தொடரை அல்லாஹ்வின் அருளோடு ஆரம்பிக்கிறேன்)

முதியோர் இல்லத்தை நோக்கி………
** உண்மையில் பெற்றோரை நல்ல முறையில் கவனிப்போருக்கு இது பொருந்தாது**

மாறிவரும் உலகில், பணமே உலகம் என்று வாழத் துவங்கி இன்று கொஞ்சம் கொஞ்சமாக அன்பு, உறவு என்பன சிதைந்து கொண்டிருக்கும் கால கட்டத்தில், பெற்றோர் பிள்ளை உறவில் விரிசலும், தன் பெற்றோரே, பிள்ளைகளுக்கு பாரமாக தெரிய ஆரம்பித்திருப்பதும் இன்றைய “நவீன சுயநல உலகின்” ஒரு முக்கிய அடையாளமே.

ஒரு காலத்தில் மேலைத்தேய நாடுகளில் இது சாதாரணமாக தெரிந்தது போய், இன்று முஸ்லிம் ஊர்களையும் இது எட்டிப்  பார்க்க ஆரம்பித்துள்ளது. பல முஸ்லிம் ஊர்களில் கஷ்டப்படும் பல முதியோர்களுக்காக, முதியோர் இல்லங்கள் அமைக்கிறார்கள். இது அவர்களின் கருணையை காட்டலாம், அதே நேரம் இன்னொரு புறம், இது பல இறுகிய உள்ளங்களின் வெளிப்பாட்டால் உருவான முதியோர் கூட்டத்தை காட்டுகிறது.

அண்மையில் ஒரு முதியோர் இல்லம் சென்றேன், அவர் சொல்லும்போது, “முன்னர் இங்கு உங்கள்  ஊரிலிருந்து ஒருவர் தான் இருந்தார். இப்போது அது மூன்று பேர் ஆகிவிட்டது என்றார்”. இது அவர் பார்வையில் சாதாரண வார்த்தையாக இருந்தாலும், இன்னொரு பார்வையில் ஒரு மோசமான அறிகுறியே. “பூனைக்கு மணி கட்டுவது யார் போல”, பலர் காத்து கிடக்கிறார்கள், தம் தெருவில் ஒருவர் கொண்டு போய் விட்டால் தானும் கொண்டு போய் விட.

அவரிடம், “இவர்கள் இறந்து போனால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது, உரிய உறவுகளிடம் தெரிவிப்போம், சிலர் உடலை எடுத்து செல்வார்கள், வேறு சிலரோ “இங்கெல்லாம் கொண்டு வர வேண்டாம், காசை அனுப்புகிறோம் அங்கேயே புதைத்து விடுங்கள் என்று கூறி, ஒரு மூன்று கப்ருகளை காட்டியது நெஞ்சை உருக்கி விட்டது.

யார் காரணம்… நாம் ஒவ்வொருவரும்தான்..

தன காலில் நிற்கும் வரை உரமாக தெரிந்த பெற்றோர்கள், தாம் சம்பாதிக்க ஆரம்பித்ததும்,  இன்று பாரமாக தோன்றிய பல மகன்களால் இவர்கள் உருவானார்கள்.

“உங்களை  வேண்டுமானால் கவனிக்கிறேன். எல்லோரையும் என்னால் பார்க்க முடியாது” எனக் கருதும் சில மனைவிகள்.

“திருமணத்திற்கு முன்னரே தனிக் குடித்தனம் வைப்பீர்களா?” எனப் பேரம் பேசும் பெற்றோர்கள். அவர்களுக்கு புரிய வில்லை தன வினை தன்னை சுடும் என்று.

நாம், நம் குழந்தைகள் என்று வாழ்வோம் என நினைக்கும் சில தம்பதிகள்.

தம் பெற்றோரின் பழமையான தோற்றத்தில் வெட்கப்பட்டு ஆபீசிலும்  நண்பர்கள் இடத்திலும் அறிமுகப் படுத்த தயங்கி நிற்கும் சில போலியான நாகரீகவாதிகள்.

இன்னும் பல.

சில பெற்றோர்களின் வறட்டு கவுரவமும், கோபமும்,  வயதுக்கு ஏற்ற முணு முணுப்பும், நமக்கு எரிச்சலை தந்தாலும், அவர்களை பார்த்து “சீ” என்ற வார்த்தையை கூட சொல்லக் கூடாது என்று பின்வரும் குர்ஆன் வசனம் கூறுகிறது.

17:23. அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!

அது போல், “தாயின் காலின் கீழ் சொர்கமுண்டு” என்ற நபி மொழியையும் நினைத்தால் நமக்கு எல்லாம் பறந்து போய் விடும், எதுவும் சுமையாக தெரியாது.

அவர்கள் வயதை அடைந்தாள் நாமும் உணர்வோம். ஒரு புறம் மரணம் பற்றிய சிந்தனை, இன்னொரு புறம் பலஹீனம் ஆகும் உடம்பு, ஓடி ஆடிய காலம் போய்  தங்கி வாழும் நிலை, நோய்கள், கணவனை இழந்த மனைவியின் அல்லது  மனைவியை இழந்த கணவனின் பழைய நியாபகங்களும் இழப்பின் வலியும்  என்று எத்தனையோ மன வேதனைகள். இதனால் சில அசவ்கரியம்  இருக்கத்தான் செய்யும் . அதற்கு அவர்களை வெறுப்பது தீர்வல்ல .

முதியோர் இல்லம் மட்டும் வேதனையல்ல, பலருக்கு வீடே சிறையாக உள்ளது. அவர்களை வைத்துக் கொண்டே வருபவர்களிடம் அவர்களை கேவலப் படுத்துவதும், “என் மகனை  கொஞ்சம் விட்டால், இவர்களை எங்காவது கொண்டு போய் விட்டு  விடுவான்” என்று கேவலமாக பேசுவதும், “அதான்  சாப்பாடு நேரத்துக்கு வருதில்ல, சாப்டுட்டு சும்மா இருக்க வேண்டியதுதானே என்று ஆணவமாக சொல்வதும் மிகப் பெரும் சிறை.

வெளியூரில் உள்ள இன்னும் சிலர் தாம் அறியாமலேயே, இதன் ஆரம்பத்தில் காலடி எடுத்து வைகிறார்கள். எப்படி? “என்ன நேத்து நீ போன் எடுக்கல?” என்று ஒரு நாள் மனைவி பேசாததால் சண்டையிடும் கணவன், “என்னம்மா, நான் ரொம்ப பிஸி, அதான் ஒரு வாரமா போன் பேச முடியல்ல” என்று கூறுவதும் இதன் ஆரம்பமே. பணம் மட்டும் அனுப்பினால் போதும் என்று நினைப்பது அதன்  தொடரே.

10,000 கு மருந்து வாங்கி கொடுப்பதில் அவர்களுக்கு கிடைக்கும் சந்தோசத்தை விட, 10 செகண்ட் போனில் நேரத்துக்கு சாப்பிட்டீர்களா? மருந்து போட்டாச்சா? என்று கேட்பது அவர்கள் நோயை பாதி குறைக்கும்.

ஒரு கதையில், ஒருவன் தன தந்தையை தன வீட்டின்  ஒரு மூலையில் வைத்து ஒரு பழைய சட்டியில் சாப்பாடு போட்டானாம். அந்த தந்தை இறந்ததும், சாப்பாடு போட்ட அவனின் மகன் ஓடிப் போய் அந்த சட்டியை எடுத்தானாம். உடனே  “இது ஏன் உனக்கு எனக் கேட்டதும்”, “இல்லை நான் வளர்ந்தால் உனக்கு சாப்பாடு போட இது வேண்டும் என்றானாம். இது நிதர்சனம். நம் குழந்தைகள் நம்மிடம்  கற்கிறார்கள்.

இன்ஷா அல்லாஹ், கணவன் மனைவி இருவரும் இருவர் பெற்றோரையும் நன்று கவனிப்போம். அவர்களை கண்ணியப் படுத்துவோம். அவர்கள் பற்றி உயர்ந்த கண்ணியத்தை நம் குழந்தைகள் மனதில் உருவாக்குவோம். அவர்களுக்காக துஆ செய்வோம்.

சிந்தியுங்கள். இதை வாசித்து விட்டு தம் பெற்றோரோடு சண்டையிட்டு பிரிந்து வாழும் ஒரு ஜீவனாவது அவர்களோடு ஸலாம் சொல்லி சேர்ந்து விடாதா? என்ற நப்பாசையில் முடிக்கிறேன்.

17:24   وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
17:24. இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!

வஸ்ஸலாம்
அபு அம்மாராஹ்
abuammaarah@yahoo.com

இப்படியும் செய்யலாம் / உதவலாம் – பாகம் 6

Previous article

கசப்பான உண்மைகள் – பாகம் 2

Next article
Sadiq
அஸ்ஸலாமு அலைக்கும் நான் எழுத்தாளன் அல்ல, கவிஞனும் அல்ல, சிறந்த பேச்சாளரோ அல்லது மார்க்க அறிஞனோ அல்ல….. ஆனால் நானும் கொஞ்சம் எழுதுவேன், கவிதை வரைவேன், சிறிது பேசுவேன், மார்க்கம் அறிந்துள்ளேன். இறைவன் தந்த திறமைகளும் எனது சிறிய அறிவும் கொஞ்சமாவது சமுதாயத்துக்கு பயன்படட்டுமே என்ற ஆதங்கத்தில் பிறந்ததே இந்த WEBSITE … நாகரீகத்தின் உச்சியில் இருப்பதாக கூறிக்கொண்டு, கலாசார சீரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த உலகத்தை, பலர் மத நெறிகளின் மூலமும், அன்பின் மூலமும், அஹிம்சை மூலமும், அழகிய நடவடிக்கைகள் மூலமும் திருத்த முயன்று கொண்டிருக்கின்றனர். உறவுகள் பேணப்படாமலும், பிறர் உணர்வுகள் மதிக்கப் படாமலும் மனிதாபிமானம் செத்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், ஏழைகள் ஏழைகளாகவும், பணக்காரர்கள் மேலும் பணம் படைத்தவர்களாகவும் மாறிக்கொண்டிருக்கும் இந்த மாயமான உலகில், நிச்சயமாக ஆக்க பூர்வமான எழுத்துக்கள் நல்ல சமுதாயத்தை உண்டாக்க வழி வகுக்கும். அதன் சிறு முயற்சியே இந்த WEBSITE இன்ஷாஅல்லாஹ். இந்த பக்கத்தில் தவறுகள் இருந்தால் மன்னித்து விடுங்கள். நல்ல கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அனுப்பி வையுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி; abuammaarah@yahoo.com இவன் Mohamed Sadiq

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *