அஸ்ஸலாமு அலைக்கும்,
ஈமானுக்காக போராடிய சகோதரர்களே, உங்கள் ஈமானை இன்னும் பலப்படுத்த வாய்ப்பு. இன்ஷா அல்லாஹ்…….. (இது மார்க்க அறிஞர்களுக்கான பதிவு அல்ல, நம்மை போன்று கொஞ்சம் தெரிந்து, கொஞ்சம் செயல்படுத்தி, அதிகம் பேசுபவர்களுக்காக).
இரவுத்தொழுகை :
தராவீஹ் உண்டா இல்லையா? எட்டா இருபதா? தராஹ்வீஹும் இரவுத் தொழுகையும் ஒன்றா என வாதிட்டோர்களே… ஆம் ரமலான் முடிந்து விட்டது. இதோ “ரமலானிலும் ரமலான் அல்லாத காலத்திலும் 8+3 தொழுதார்கள்” என்ற உங்கள் வாதத்தின் நபி மொழிக்கேற்ப . இன்றிலிருந்து இரவுத் தொழுகைகளை ஆரம்பித்து விடுங்கள். ரமலான் அல்லாத காலமும் வந்துவிட்டது.
பிறையும் மாத ஆரம்பமும் :
ரமலான் மாத நோன்புக்கும் பெருநாளுக்கும் மட்டும் பிறை அல்ல, ஒவ்வொரு மாத ஆரம்பத்திற்கும் தான். ஒரு முஸ்லிம் பிறை பார்த்து 13, 14, 15 இல் நோன்பு வைக்க மாத ஆரம்பம் தேவை. பிறையில் காட்டிய அதே வேகத்தை, இந்த நோன்புகளிலும் காட்டுங்கள்.
பௌர்ணமி முதல் பிறையோ, இரண்டாம் பிறையோ, மூன்றாம் பிறையோ எனக்கு தெரியாது. ஆனால் இனி வரும் காலங்களில் உரிய கிரகண தொழுகைகளை தொழ ஆரம்பியுங்கள்.
வித்ரு தொழுகை
நாளின் ஆரம்பம் சுப்ஹா மக்ரிபா என தெரிவது நல்லதுதான். அதே போல் இறுதியாக நாம் தொழ வேண்டிய வித்ருகளை தினமும் தொழுவதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.
குனூத்
சுப்ஹில் குனூத் உண்டா இல்லையா என்பதிலுள்ள உங்கள் ஆர்வம் பாராட்ட வேண்டியது. இன்ஷா அல்லாஹ், முதலில் சுப்ஹ் ஜமாத்தை பேணுவோம். அதன் பின் இன்னும் ஆராய்வோம்.
குர்ஆன் ஓதல்
வுழூவின்றி குர்ஆனை தொடலாமா கூடாதா என சிந்திப்போம். அதே நேரம் இந்த ஆராய்ச்சியின் நடுவே ஒவ்வொரு நாளும் குர்ஆனை ஓத பழகுவோம்.
சலாத்தை பரப்புங்கள்
“அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் சொல்லுங்கள்” என்பதில் அறியாதவரில் முஸ்லிம் அடங்குமா அடங்காதா? நல்ல கேள்விதான். அதே நேரம் நம் தூர இரத்த உறவுகளுக்கு போன் பேசி எத்தனையோ நாள். கொஞ்சம் பேசுவோமே. அடுத்த தெரு/கிராம மாமி மச்சி வீடுகளுக்கு போய் அதிக நாள். கொஞ்சம் விசிட் பன்னுவோமே.
கழா தொழுகை
சட்டங்களை ஆராய்வது நல்லதே. நம் நபிகளார் எத்தனை முறை முதல் ஜமாத்தை மிஸ் பண்ணி இரண்டாம் ஜமாஅத் வைத்தார்கள்? அல்லது சோம்பலில் அல்லது உலக காரணத்திற்காக வீட்டில் தொழுதார்கள்? முடிந்தவரை உருப்படியான காரணம் இல்லாமல் பள்ளிக்கு ஐவராக தாமதமாக வந்து இரண்டாம் ஜமாஅத் வைப்பதை நிறுத்துவோம் (பயணம், வேலை நடுவே தாமதித்து வந்து தொழுபவர்களை சொல்ல்வில்லை).
தஜ்வீத் முறைப்படிதான் ஓத வேண்டுமா?
எது எப்படியோ…. 300 பக்கங்கள் கொண்ட 10 புத்தகங்களை ஒவ்வொரு வருடமும் பள்ளிக் கூடத்தில் படிக்கும் நமக்கு ஒரு 100 பக்கத்தில் அடக்கும் தஜ்வீதை படிக்க ஏன் முடியாது. பெரிய காரிகளின் அழகிய ஒதலுக்கு காரணம் அவர்கள் பிறந்த நாடல்ல, தஜ்வீத் சட்டங்களே. இது படித்தவர்களுக்கு தெரியும். “அழகிய முறையில் ஓத வேண்டியது நபி மொழியே” ஆர்வத்தை காட்டுவோம் தஜ்வீத் படிப்பதில்.
கூட்டு துஆ?
கூட்டு துஆ உண்டா இல்லையா எனக்கு தெரியாது. ஆனால் ஒன்று தெரியும், நபிகளார் ஒரு நாளில் 70 முறை துஆ கேட்டதாகவும் 100 முறை துஆ கேட்டதாகவும் படித்த நியாபகம். நீங்களும் அதிகம் துஆ கேட்க முயலுங்கள்.
தமிழாக்கம்
லமஸ என்றாலும், ருய்யத் என்றாலும், இஷாரா என்றாலும் என்ன என்று தெரியுமா என பலர் கேட்கின்றனர். தெரியவில்லை. ஆனால் அரபு மொழியை வகுப்புகள் மூலமும், ஆன்லைன் மூலமும் படிக்க பல வழி உண்டு. அது மட்டும் தெரியும், முயற்சிப்போமா? ஏனென்றால் இதற்கு விளக்கம் தெரிந்த பலருக்கு, நாம் சுஜூத், ருக்கூ, அத்தஹிய்யாத், போன்ற நிலைகளில் ஓதும் வசனங்களுக்கு பொருள் தெரியவில்லை. இன்னும் சொன்னால் “சமி அல்லாஹு லிமன் ஹமிதா” என்பதற்கே அர்த்தம் புரியவில்லை.
கூட்டு துஆவில் பொருள் தெரியாமல் ஆமீன் சொல்வது கொஞ்சம் நெஞ்சை குத்தத்தான் செய்கிறது. ரப்பனா துஆக்களும் நபிகளார் கேட்ட துஆக்களும் அரபியிலும் தமிழிலும், புத்தக வடிவில் உள்ளது. இதை ஆழமாக படிக்க சில வாரங்கள் போதும். அதற்கு மேல் நாமாகவும் துஆ கேட்கலாம்.
பிக்ஹ் சட்டங்கள்
ஆம். நபிகளாரை தீவிரமாக பின்பற்றி, இந்த சட்டங்களை தீவிரமாக ஆராயும் பலருக்கும் ஒரு வேண்டுகோள், என்னிடம் இது பற்றி கேட்காதீர்கள். நான் இப்போதுதான் நபிகளார் மனைவி பெயர்களையும், குழந்தை பெயர்களையும், பிற நபிகள் பெயர்களையும், இஸ்லாமிய மாத பெயர்களையும் பாடமாக்கி கொண்டிருக்கிறேன். அது முடிந்த பிறகு பார்ப்போம்.
தஃ வா
மாற்று மதத்தவர்களுக்கு குர்ஆனை கொடுக்கலாமா? ZAKIR NAIK, இன்னும் பல தாயிகள் பேசுவதில் பிழை உண்டா என்பதை ஆராயும்போது ஒன்று தெரிகிறது, நான் ஆராய்ந்து குறை கண்டு பிடிக்கத்தான் முடிகிறதே தவிர, என்னால் ஒருவரை கூட இஸ்லாத்துக்கு கொண்டு வர முடியவில்லை. அவர்களோ பலரை இஸ்லாத்தில் நுழைத்து கொண்டு இருக்கிறார்கள்.
தொழுகையில் கை கால்களை எவ்வாறு விரித்து வைப்பது.
கால்களை விரித்து வைக்கும் ஹதீஸை இன்னும் கொஞ்சம் படித்துப் பாப்போம். அதே நேரம் கால் கடுக்கவும், கால்கள் வீங்கும் அளவுக்கும் தொழுத ஹதீஸ்கள் உண்டு. நீண்ட சூராக்களை மனனம் செய்து அதை ஓதி தொழப் பழகுவோம்.
இன்ஷா அல்லாஹ்.
இன்னும் எழுதலாம், இப்போதைக்கு இது போதும். இதை வாதங்களில் பதிலடி கொடுக்க பயன்படுத்தினால் அது உங்கள் தவறு. கட்டுரையின் நோக்கம் அதுவல்ல. நம் அமல்களை மேலும் அதிகரிக்கவும், நிதானமாக தெரிந்த விடயங்களை மட்டுமே பேச நம்மை பழக்கப்படுத்தவுமே இந்த பதிவு.
வஸ்ஸலாம்
அபு அம்மாராஹ்
(முஹம்மது சாதிக்)
www.abuammaarah.com



