இரு உள்ளங்கள்….
முஹம்மத், அஹமத், அந்த இருவரும், மிக அருமையான தனி மனிதர்கள். நல்ல பல சமூக பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வாழ்ந்து வருபவர்கள். அழகிய குணம் உடையவர்கள்.
அண்மையில் துரதிஷ்தவசமாக, இந்த Facebook மூலம் ஒரு சிறு பிரச்சினை பெரிய பிரச்சினையாகி, அதற்கு ஏற்றார்போல ஒரு சிலர் இரு பக்கமும் like உம் comment உம் போட்டு இன்று இரு துருவங்களாக நிற்கின்றனர். இருவரும் மிக அழகிய குணம் உடையவர்கள். ஆனால் சைத்தானின் ஊசலாட்டத்தில் இவர்கள், தோற்றுத்தான் போனார்கள். இப்போது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தாலே அவர்களுக்குள் கடுமையான மன உளைச்சல்.
அன்று எட்டாம் நோன்பு. அந்த பாவ மன்னிப்பின் மாதத்தில், திடீரென்று, முஹம்மத் மனதில் ஒரு எண்ணம். சட்டையை போட்டுக் கொண்டு வெளியே கிளம்பினான். தன் பயணத்தை தடுக்கும் பல நிகழ்வுகள். அசரவில்லை, வேகமான நடை. சரியாக அஹமத் வீட்டின் கதவை தட்டினான். திறந்தது அஹமத். எதிர்பார்க்காத அவனுக்கு, கடுமையான கோபம். ஆத்திரம் உச்சத்திற்கு சென்றது. அந்த கணம், முஹம்மத் உள்ளே வரலாமா என கேட்க, விருப்பமில்லாமல் உள்ளே அழைத்தான்.
முஹம்மதின் சில வரிகள்…
எல்லா தப்புகளும், என்னதாகவே இருக்கட்டும். அத்தனைக்கும் மிகவும் வெட்கப்படுகிறேன். எதையும் மீண்டும் தோண்டிப் பார்க்க வேண்டாம். இந்த ரமழான் மாதத்தில் என் தவறுகளை மன்னித்து, அல்லாஹ்வுக்காக என்னை பொருந்திக் கொள், என்று கூற, அஹம்துக்கு சில துளி கண்ணீர் வந்து விட்டது. சரி வருகிறேன் என வெளியே வர, வாயடைத்து நின்றான் அஹமத். தனக்குள் இருந்த மன்னிக்காத தன்மையும், சகிப்புத்தன்மையின்மையும், அப்போது உள்ளத்தை உறுத்தியது.
இன்னொரு புறம், ஒரு அளவிலா மகிழ்ச்சியும், தன் தலையில் இருந்து மிகப் பெரிய பாரத்தை இறக்கி வைத்த உணர்வும், மன நிம்மதியும் முஹம்மதுக்கு. இதுதான் விட்டுக் கொடுக்கும் தன்மை, மன்னிப்பின் அருமையோ…. ஒரு வருட சண்டை ஒரு நிமிடத்தில் கரைந்தது.
வீட்டிற்குள் திரும்பி வரும்போது, ஏதும் அறியாத மனைவி கேட்ட முதல் வார்த்தை.. என்னங்க, உங்க முகம் ரொம்ப பிரெஷ்ஷா இருக்கு. அதுவுன் ஒரு பக்கமா சிரிச்சிட்டே வர்ரீங்க, என்னாச்சு? என்பதுதான்.
அன்றிலிருந்து அவர்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். (இப்போது அவர்கள் குழந்தைகள், இலேசாக முட்டிக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள். ஹா ஹா)
ரமழான் உறவுகளை புதுப்பிக்கும் மாதம். பகைமைகளை தூர எறியும் மாதம். நீங்களும் நீண்ட கால பகைமைகளை முறித்து நட்பை பேணத் தயாரா?
வஸ்ஸலாம்
அபு அம்மாராஹ்
முஹம்மது சாதிக்



